×

உடுமலை பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை : உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினசரி உணவில் கீரைகள்,காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டாலே நோயற்ற வாழ்வு வாழலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனவே கீரைக்கு ஆண்டு முழுவதும் கிராக்கி இருக்கிறது. உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும்பாலான மாதங்களில் இதமான பருவநிலை நிலவி வருவது கீரை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இதனால் உடுமலையையடுத்த கிளுவங்காட்டூர் ,உரல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்  காட்டி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கீரை சாகுபடியைப் பொருத்தவரை கடும் வெயில் மற்றும் கனமழை ஆகிய பருவங்களைத் தவிர அனைத்துப் பருவங்களிலும் நல்ல மகசூல் தரக்கூடியதாகும்.

தற்போது வெயிலின் கடுமை அதிகமாக உள்ள நிலையில் கீரைகளுக்கு போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வீணாகி விடும். இதுபோன்ற சூழலில் நிழல் வலைக் குடில்கள் அமைப்பதன் மூலம் பயிர் பாதிப்பை தவிர்ப்பதுடன் கூடுதல் மகசூல் ஈட்ட முடியும். எனவே கீரை சாகுபடிக்கு மானிய விலையில் நிழல் வலைக் குடில்கள் அமைப்பதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் உதவிகள் செய்ய வேண்டும். கீரை,காய்கறிகள் போன்றவற்றின் விலை பல ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

ஆனால் இடுபொருட்களின் விலை மற்றும் ஆள் கூலி ஆகியவை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.இதுதான் விவசாயத் தொழிலை கைவிட்டு பலரும் மாற்றுத் தொழில் தேடிச் செல்வதற்குக் காரணமாக அமைகிறது. பல ஆண்டுகளாக கரும்பு சாகுபடியை மட்டுமே நம்பியிருந்த நிலையில் கரும்பு சாகுபடியில் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும்.ஆனால் உடனடி வருமானம் என்ற வகையில் ஒரு பகுதி விளைநிலத்தில் கீரை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளோம்.

அரைக்கீரை,முளைக்கீரை போன்றவை விதைத்து 22 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடுகிறது.அந்தவகையில் ஒரு கிலோ விதைக்கு 1000 கட்டுகள் வரை கீரை கிடைக்கிறது. அறுவடை செய்த கீரைக் கட்டுகளை உடுமலை உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் மட்டுமல்லாமல், வீதிகளில் விற்பனை செய்பவர்கள் எங்களிடம் நேரடியாக கீரைகளை கொள்முதல் செய்கிறார்கள்.

மற்ற காய்கறிகளைப் போல இல்லாமல் கீரைகள் கொண்டு சென்று சில மணி நேரத்திலேயே முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விடும். தற்போது இயற்கை முறையில் ரசாயனங்கள் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் கீரைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.எனவே இயற்கை விவசாயத்தில் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.என்று அவர்கள் கூறினர்.

Tags : Udumalai , Udumalai: Farmers in the Udumalai area are showing interest in lettuce cultivation.
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...