×

கொரோனா பரவல் தீவிரம் : இந்தியாவிற்கு உதவ பிரிட்டன் , அமெரிக்கா , ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் முடிவு!!

டெல்லி : கொரோனா 2வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் நேற்று அறிவித்துள்ளது. இவற்றில் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த மருத்துவ உபகரணங்கள் நாளை மறுநாள் இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 2ம் கட்டமாக மீண்டும் உபகரணங்கள் வழங்கப்படும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதே போன்று ஜெர்மனியும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதற்காக பிரத்யேக திட்டத்தை தயாரித்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவிதமான உதவி என்பதை அவர் வெளியிட மறுத்துள்ளார்.கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் பொதுவான போராட்டம் என்றும் இந்த போராட்டத்தில் ஜெர்மனி, இந்தியாவுக்கு எல்லா உதவியும் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போன்று அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது.

கொரோனா போரில் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை அனுப்பிவைக்கவும் அதிவேகமாக ஆக்சிஜன் தயாரிப்பிற்கான உபகரணங்களை அனுப்பி வைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதே போன்று பிரான்சும் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க முன்வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், சீனா,ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Britain ,US ,Germany ,France ,India , கொரோனா
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...