தடுப்பூசி, மூலப் பொருட்களை வழங்க மறுப்பு நாங்கள் மட்டும் வேண்டும் இந்தியா வேண்டாமா...? அமெரிக்காவில் இந்தியர்கள் கொந்தளிப்பு; வெளிநாடுகளிலும் அணி சேரும் தேசபக்தி

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா  நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கின்றது. நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசிக்கான அவசியமும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மட்டுமின்றி மேலும் சில நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்தியாவிற்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என சீரம் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவாலே அமெரிக்காவிற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மூலப்பொருட்கள் மீதான தடையை நீக்க முடியாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தேவைக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இந்தியாவிற்கு உதவ முன்வராதது அமெரிக்க இந்தியர்கள் மட்டுமின்றி, உலக முழுவதும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்தியர்களும் ஒன்று திரண்டுள்ளனர். அமெரிக்காவின் இந்த  நடவடிக்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்கர்கள், அமெரிக்க எம்பி.க்கள், அந்நாட்டு தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிடம் தேவைக்கு அதிகமாக தடுப்பூசி இருப்பு உள்ளது. பல இடங்களில் தடுப்பூசியின் தேவை குறைந்துள்ளது. பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற அதிபரின் நிலைபாட்டின் காரணமாக இந்தியாவிற்கான தேவையை மறைமுகமாக நிராகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அமெரிக்க சேம்பர் ஆப் காமர்ஸ் கடந்த வெள்ளியன்று, கொரோனா நோய் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்து உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அது வெளியிட்டுள்ள கோரிக்கையில், ‘நாம் அனைவரும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறாத வரையில், யாருக்குமே பாதுகாப்பு கிடையாது. லட்சக்கணக்காக கையிருப்பு இருக்கும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை கொரோனாவினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தடுப்பு மருந்துகள் அமெரிக்காவிற்கு தேவையில்லை. ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஜூன் மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தேவையான அளவு மருந்தை உற்பத்தி செய்து விடுவார்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அதிகாரிகள், ஜனநாயக கட்சி பிரமுகர்கள் கூட இந்தியாவின் தேவைக்கு உடனடியாக செவிசாய்க்கும்படி பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். இந்தியாவில் தற்போதைய கொரோனா 2வது அலையின் சூழலுக்கு அமெரிக்க மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. எப்போதும் தேவைப்படும் நேரத்தில் மற்றவர்களுக்கு  இந்தியா ஆதரவு அளிக்கும். இப்போது, அமெரிக்கா இந்தியாவிற்கு உதவுவதற்கான நேரம் வந்துள்ளததாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் தெற்காசியாவுக்கான செயலாற்றிய முன்னாள் வெளியுறவு துறை உதவி செயலாளர் நிஷா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பைடன் பதவியேற்ற பிறகு, அவருடைய அரசிலும் நிர்வாகத்திலும் இந்திய வம்சாவளி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பதவிகளை வாரி வழங்கி, முக்கியத்துவம் அளித்துள்ளார். ஆனால், இந்தியா தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அதற்கு உதவாமல் அதிபர் பைடன் பாராமுகம் காட்டுவதால், ‘அமெரிக்காவுக்கு நாங்கள் மட்டும் வேண்டும். இந்தியா வேண்டாமா?’ என்று சமூக வலைதளங்களில் இந்தியர்கள் ஆவேச கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

இந்தியா செய்த உதவி நினைவூட்டும் மக்கள்

கொரோனா போராட்டத்தில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்னாள் அதிபர் டிரம்ப் கடைப்பிடித்த போதிலும், பல விவகாரங்களில் இந்தியாவிற்கு உதவியதை சில இந்திய அமைப்புக்கள் நினைவு கூர்ந்துள்ளன. ஹைட் ரோகுளோரோகுயின் தேவை இருந்தபோதும் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா வழங்கியது. இதனை சிலர் டிவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளனர்.

மவுனம் காக்கும் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்தனர். ஆனால், இந்தியாவுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவாமல் கமலா ஹாரிஸ் மவுனம் சாதிக்கிறார். ‘பெருந்தொற்று காலத்தில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு உதவ வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்துக்கு கமலா ஹாரிஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்,’ என்று சமூக வலைதளங்களில் இந்தியர்கள் கொந்தளித்துள்ளனர்.

4 கோடி தடுப்பூசியை தந்து பல உயிர்களை காக்கலாமே

அமெரிக்காவிடம் கோடிக்கணக்கில் கையிருப்பில் இருக்கும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஆஷிஷ் கே ஜா என்பவர், ‘நம்மிடம் 3.5-4 கோடி அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் உள்ளன. இதை அமெரிக்கர்கள் பயன்படுத்தப் போவது இல்லை. இவற்றை ஏன் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது? அல்லது கடனாக கொடுக்கலாமா? அது, ஏராளமான உயிர்களை காப்பாற்றுமே,’ என கூறியுள்ளார்.

சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்  கீதா, ‘இந்தியாவில் நிலவும் சுகாதார நெருக்கடியால் ஆழ்ந்த கலக்கம் அடைந்துள்ளேன். என்னுடைய ஏராளமான குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் கொரோனா 2வது அலையின் பிடியில் சிக்கியுள்ளனர்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>