×

புதுச்சேரியிலும் கோயிலில் பொது வழிபாட்டுக்கு தடை

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோயில்களில் பொது வழிபாட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்த நிலவரம், இதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் பின்வருமாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், வழிபாட்டு தலங்கள், தேனீர் கடைகள் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது, உணவு விடுதிகள், தேனீர் கடைகள், மதுக்கடைகளில் பார்சல்களை மட்டும் அனுமதிப்பது, கோயில்களில் பொது வழிபாட்டுக்கு தடைவிதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றுக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 50 நபர்கள், இறுதி சடங்குகளில் 25 நபர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.

கொரோனா இறப்புகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படும். முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதோடு, அவர்கள் சுமையின்றி பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவுள்ளதால் அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : Public worship at the temple in Pondicherry is also banned
× RELATED கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற...