×

ராணிப்பேட்டை ஆர்டிஓவாக இருந்தபோது மண் கடத்தல் வழக்கில் ஆவின் பொதுமேலாளர் சிக்கினார்: பட்டியலில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்; வாட்ஸ் அப்பில் பணப்பரிமாற்ற விவரம்

வேலூர்: ராணிப்பேட்டையில் ஆர்டிஓவாக பணியாற்றிய ஈரோடு ஆவின் பொதுமேலாளர் உட்பட 19 பேர் மீது மண் கடத்தல் வழக்கில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இருப்பவர் இளம் பகவத். இவர் 2019 மார்ச் 25ம் தேதி சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தியவர்களை மடக்கியபோது, முக்கிய நபரான சரவணன் என்பவர் தப்பியோடும்போது கீழே விழுந்த அவரது இரண்டு செல்போன்கள் சப்-கலெக்டர் இளம்பகவத்திடம் சிக்கியது.

அந்த செல்போனில் இருந்த அழைப்புகள் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்தபோது சரவணனுக்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு அறிக்கை அனுப்பினார். அதன்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சரவணனின் செல்போன் எண்களில் கடந்த 01-08-2018ல் இருந்து 25-03-2019 வரை செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர்.

அதில், ஏற்கனவே ராணிப்பேட்டை ஆர்டிஓவாக இருந்து, தற்போது ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பொது மேலாளராக உள்ள முருகேசனுடன் நேரடி தொடர்பில் இருந்ததுடன் இருவருக்கும் இடையில் பணப்பரிமாற்றம் இருந்ததற்கான வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் முழுமையாக கிடைத்தது. மேலும், முருகேசன் அவரது மனைவி அரசானி என்பவரது பெயரில் ₹23 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் வாங்கியதற்கான முழு பணத்தையும் சரவணன் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், அப்போது வாலாஜா பிர்கா வருவாய் அலுவலராக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக உள்ள கன்னியப்பன், பாண்டியநல்லூர் விஏஓ கார்த்திக், தற்போது அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலராக உள்ள வெங்கடேசன், முன்னாள் வாலாஜா மண்டல துணை தாசில்தார் மதி, சோளிங்கர் இன்ஸ்பெக்டராக இருந்த எம்.வெங்கடேசன், சோளிங்கர் எஸ்ஐகளாக இருந்த மகாராஜன், பாஸ்கரன், கொண்டபாளையம் போலீஸ் நிலைய காவலர் விஜய பாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ சங்கர், சோளிங்கர் தனிப்பிரிவு ஏட்டு பச்சையப்பன், ஏட்டு விஜயகுமார், எஸ்எஸ்ஐகள் சிவக்குமார், பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எஸ்ஐ ராமமூர்த்தி, எஸ்எஸ்ஐ ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோருடன் சரவணன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து முறைகேடாக இயங்கிய மண் குவாரிக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் மற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் 4 பேரும், மண் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியான சரவணன் மற்றும் காவல் துறையினர் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துறை தலைமை அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Avin General Manager ,Ranipettai ,WhatsApp , Avin General Manager was involved in a land smuggling case when Ranipettai was the RTO: Police and Revenue officials on the list; Transfer details on WhatsApp
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...