கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 229 ரயில் பெட்டிகள்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

சென்னை: தமிழக அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, 229 ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக தெற்கு ரயில் மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 3800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சரிகட்டும் வகையில் தெற்கு ரயில்வே உதவ வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க, தெற்கு ரயில்வேயும் தற்போது 229 ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெட்டிகளாக மாற்றி அமைத்துள்ளது. இந்த பெட்டிகளில் சுமார் 4,000 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க முடியும். கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் போக மற்ற பெட்டிகள் அனைத்தும் முக்கிய பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் பயணிக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மாநில அரசை பொறுத்தவரை ஆக்சிஜன் ரயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் அதற்கும் தெற்கு ரயில்வே தயாராக உள்ளது. ரயில் செல்லும் தடங்கள், நடைமேடைகளின் உயரம் ஆகியவை ரயில் நிலையங்களில் எப்படி இருக்கிறது என்பதை சோதித்த பிறகு ரயிலில் ஆக்சிஜன் டேங்கர்களை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>