×

ஞாயிறு முழு ஊரடங்கால் பார்வையாளர்கள் வராததால் சுற்றுலா தலமான மாமல்லபுரம் முடங்கியது

சென்னை: கொரோனா 2வது அலையை தடுக்க ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு நேற்று கடை பிடிக்கப்பட்டது. இதனால், மாமல்லபுரத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. உலக சுற்றுலா தலங்களில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவில் கூட்டம் காணப்படும். இந்நிலையில், கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேப்போல், தமிழகத்திலும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் வெளியூர்களை சேர்ந்த சுற்றுலா வாசிகள் வர தடைவிதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் அரசு பஸ், தனியார் வேன், ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை. மேலும் ஓட்டல், ரெஸ்டாரண்ட், லாட்ஜ், தங்கும் விடுதிகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டது.

இந்நிலையில், வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கோவளம் செல்லும் சாலை, கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, ஒத்த வாடை தெரு, அண்ணாநகர், கங்கொண்டான் மண்டபம் தெரு, கலங்கரை விளக்கம் சாலை, மாட வீதி, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.


Tags : Mamallapura , Because the full curfew on Sunday did not attract visitors Mamallapuram, a tourist destination, was paralyzed
× RELATED மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம்...