×

பயிருக்கு விலை இல்லை ... களையெடுக்க ஆளில்லை: பேரையூரில் தரிசாகும் விவசாய நிலங்கள்

பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியப்பகுதிகளில் விவசாயம் செய்யமுடியாமல் விவசாய நிலங்களை தரிசுநிலங்களாக மாறி வருகின்றன. மீதிமுள்ள நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சோளம், கம்பு, மக்காச்சோளம், தக்காளி, கத்திரிக்காய், துவரை, வெங்காயம், நெல், உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, உள்ளிட்ட பூக்கள் வகைகளையும் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் மழையை நம்பிய மானாவாரி நிலங்களே அதிகம். பயிர்களை களை எடுப்பதற்கும், விளைச்சலை அறுவடை செய்வதற்கும், உரம் போடுவதற்கும், கூலிவேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. பெரும்பாலானோர் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்று விடுவதாலும், போதிய ஆட்கள் கிடைக்காமல் போனதாலும், 10 ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது 3 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.

மீதி நிலங்கள் தரிசு நிலங்களாக கிடைக்கிறது. விவசாயம் செய்து நஷ்டப்பட்டு கடன்பட்டு ஊரை காலிசெய்து போவதற்கு பதிலாக நிலங்கள் தரிசாக போனாலும் பரவாயில்லை, குறைந்த அளவு விவசாயம் செய்து நஷ்டமாகாமல் தப்பித்துக்கொள்ளலாம் என விவசாயிகள் முடிவுக்கு வந்து விட்டனர். இதுகுறித்து பெருங்காமநல்லூரைச்சேர்ந்த விவசாயி அசோகன் கூறுகையில், இனிவரும் காலங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமானது. நாங்கள் கஷ்டப்பட்டும் கடன்பட்டும் விளைவித்த விளைபொருட்களை விலை இவ்வளவுதான் என்று விலையை நிர்ணயம் செய்ய எங்களுக்கு எந்த அதிகாரமும் இருப்பதில்லை. ஆனால் கடைகளில் உள்ள விவசாய விதைப்பொருட்கள், உரம், விவசாய உபகரணங்கள், உள்ளிட்ட அனைத்தையுமே கடை உரிமையாளர்கள் விலைநிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். இது போன்ற நிலைமை தொடரும் பட்சத்தில் விவசாய நிலங்களில் வேலைசெய்ய மனிதர்களும் மறந்து போவார்கள். விவசாயிகளும் இனி விவசாயம் செய்ய யாரும் முன்வராமல் போவார்கள்.

இனிவரும் சந்ததியினர் படித்து பட்டம் பெற்று வேறு வேலையை எதிர்நோக்கியே செல்வதால், விவசாயம் பக்கம் யாரும் தலைவைத்து படுக்க மாட்டார்கள் என்று கூறினார். இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். தரிசுநிலங்கள் அதிகம் இருந்தால் விவசாயம் செய்யாததற்காண காரணத்தை வேளாண்மைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும். விவசாயிகள் தன்னம்பிக்கையை இழந்து விவசாயத்தை கைவிடாதவாறு பாதுகாக்க வேண்டும். தற்போது வேளாண்மை அலுவலகங்களில் உண்மையான விவசாயிகள் யாரும் தேவையான மானியபொருட்களை பெற முடிவதில்லை. மாறாக புரோக்கர்கள் ஆளுங்கட்சியினர்கள் உள்ளிட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளுடன் அதிகம் தொடர்பு உள்ளவர்களே அதிகம் மானிய பொருட்களை பெற முடிகிறது. இந்த நிலை மாறவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : There is no price for the crop ... No one to weed: Barren agricultural lands in Peraiyur
× RELATED வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ