×

நாமகிரிப்பேட்டை அருகே சூறைக்காற்றுடன் கனமழை 10 வீடுகள் இடிந்து சேதம்: வாழை மரங்கள் முறிந்து நாசம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 10 வீடுகள் சேதமடைந்தது. தவிர வாழை மரங்களும் முறிந்து நாசமானது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே சாரல் மழை பெய்தது. பின்னர் சுமார் 6 மணியளவில் இருந்து இரவு 10மணி வரை சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதில் கார்கூடல்பட்டியில் 2 வீடுகள், பிலிப்பாகுட்டையில் 4 வீடுகள், ஒண்டிக்கடையில் 2 வீடுகள், முள்ளுக்குறிச்சியில் 2 வீடுகள் என மொத்தம் 10 வீடுகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு, சுவர்கள் உள்ளிட்டவைகள் இடிந்து சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

மேலும், இப்பகுதியில் விவசாயிகள் தற்போது மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் முழுவதும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்துபோனது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, உரிய இழப்பீடை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்): மங்களபுரம் 27, ராசிபுரம் 50, எருமப்பட்டி 40, குமாரபாளையம் 28 என மொத்தம் 145 மில்லி மீட்டர்  மழை பதிவாகியுள்ளது.


Tags : Nagarapatta , Namagiripettai, with storm, heavy rain, 10 houses, banana trees, ruined
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே மாணவிக்கு...