வெளிமாநிலத்துக்கு அனுப்ப முடியாததால் தர்மபுரியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கிலோ ₹6க்கு விற்பனை

தர்மபுரி: கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, தர்மபுரியில் இருந்து தக்காளியை கொண்டு செல்ல முடியாததால், விலை கடுமையாக சரிந்தள்ளது.  நேற்று ஒரு கிலோ தக்காளி ₹4க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி  சாகுபடி செய்துள்ளனர். நாள்தோறும் பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் சந்தைக்கு, சராசரியாக 100 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது. கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்கள், சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரில் வந்து தக்காளி வாங்கி செல்கின்றனர்.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், வெளிமாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல இபாஸ் தேவைப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவுடன் இபாசும் உடனே கிடைப்பதில்லை. இதனால் உற்பத்தி செய்த தக்காளியை வெளிமாநிலத்திற்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் இன்று (25ம்தேதி) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்படுவதால், விரைவில் அழுகக்கூடிய தக்காளியை வாங்கி இருப்பு வைக்க கடைக்கார்கள், வியாபாரிகள் முன்வரவில்லை. இதனாலும் தக்காளி விலை கடு்ம சரிவை சந்தித்துள்ளது. நேற்று தக்காளி கிலோ ₹4 முதல் ₹6 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ வெளிமாநிலத்திற்கு தக்காளியை அனுப்ப முடியவில்லை. கொரொனா ஊரடங்கினால் உணவங்கள் மூடப்படுவதால் தேவை குறைந்துவிட்டது. இதனால் தக்காளி விலை சரிந்த நிலையில் உள்ளது. சில விவசாயிகள் அறுவடை செய்யாமல், செடியிலேயே விட்டுள்ளனர்’ என்றனர்.

Related Stories:

>