மோரிஸ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராஜஸ்தான் ராயல்சுக்கு 134 ரன் இலக்கு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 134 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. கொல்கத்தா தொடக்க வீரர்களாக ராணா, கில் களமிறங்கினர். கில் 11 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து ராணாவுடன் திரிபாதி இணைந்தார். ராயல்ஸ் பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, கேகேஆர் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது.

ஓரளவு தாக்குப்பிடித்த ராணா 22 ரன் எடுத்து (25 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) சகாரியா பந்துவீச்சில் சாம்சன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சுனில் நரைன் 6 ரன் எடுத்து உனத்காட் வேகத்தில் ஜெய்ஸ்வாலின் அற்புதமான கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் மோர்கன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட்டானது கொல்கத்தா அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அந்த அணி 10.2 ஓவரில் 61 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

உறுதியுடன் போராடிய திரிபாதி 36 ரன் (26 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் பராக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 ரஸ்ஸல் 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, தினேஷ் கார்த்திக் 25 ரன் (24 பந்து, 4 பவுண்டரி), பேட் கம்மின்ஸ் 10, ஷிவம் மாவி 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்த 4 விக்கெட்டையும் மோரிஸ் அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ராயல்ஸ் பந்துவீச்சில் மோரிஸ் 4 ஓவரில் 23 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். உனத்கட், சகாரியா, முஸ்டாபிசுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

Related Stories:

>