×

திருச்சூர் பூரம் விழாவில் விபத்து ஆலமர கிளை முறிந்து விழுந்து 2 தேவசம் போர்டு ஊழியர் பலி

திருவனந்தபுரம்: திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆலமர கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடந்துவரும் பூரம்  திருவிழா உலக பிரசித்திப்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக  இந்த ஆண்டு நிபந்தனைகளுடன் பூரம்  விழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, விழாவில் பக்தர்கள்  கலந்து கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குடை மாற்றும்  நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த பூரம் விழாவில் 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிரம்மஸ்வம் மடத்தின் அருகில் பஞ்சவாத்தியம் தொடங்கியது. அதிகாலை 12.20 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். அந்த கிளை மின் கம்பியின் மீதும் விழுந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தில் அங்கு நின்ற அர்ஜூனன் என்ற யானை மிரண்டு ஓடியது. மேலும், கிளை  முறிந்து விழுந்ததில் திருவம்பாடி தேவசம் போர்டு ஊழியர்களான ராதாகிருஷ்ணன்  (55), ரமேஷ் (56) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை் மருத்துவமைனயில்  அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தாடர்ந்து, நேற்று அதிகாலை நடக்க இருந்த வாண வேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.


Tags : Thrissur Pooram accident , Board employee killed in Thrissur Pooram accident
× RELATED தொழிலதிபர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்