×

உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக ரமணா பதவியேற்பு: ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 48வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது நடைமுறை. அதன்படி, தலைமை நீதிபதியாக இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற எஸ்.ஏ,பாப்டே,  மூத்த நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தார்.

அதற்கு கடந்த 6ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நேற்று பதிவியேற்று கொண்டார். இதற்கான நிகழ்ச்சி, ஜனாதிபதி மாளளிகையில் நடந்தது. இதில், ரமணாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 என்.வி.ரமணா கடந்த 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவரது முழு பெயர் நூதலபதி வெங்கட ரமணா. ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000, ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கடந்த 2014ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று இருப்பது இதுவே முதல்முறை.


Tags : Ramana ,Chief Justice ,Supreme Court ,President , Ramana sworn in as 48th Chief Justice of the Supreme Court: President sworn in
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...