ரூ.150க்கு வாங்கி விநியோகம் மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: ‘கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்,’ என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரவமாகி உள்ள நிலையில், வரும் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கு தேவையான தடுப்பூசிகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் திடீரென உயர்த்தியது. இதன்படி, மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதே நேரம் மத்திய அரசுக்கு மட்டும் ஒரு டோஸ் தடுப்பூசி தொடர்ந்து ரூ.150க்கே வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. ஏற்கனவே, இந்த விலைக்கு வாங்கிய தடுப்பூசிகளைதான் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கி இருக்கிறது. தற்போது, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதை ரூ.400க்கு நேரடியாக வாங்கிக் கொள்ளும்படி கூறி இருப்பதால், மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் ஏற்கனவே கடும் நிதிச்சுமையில் உள்ள நிலையில், இவ்வளவு விலை கொடுத்து தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்க முடியுமா? என்று அவை கேள்வி எழுப்பி உள்ளன. இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது. இது பற்றி மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ரூ.150க்கு மட்டுமே கொள்முதல் செய்யும். மாநில அரசுகளுக்கு இது தெளிவுபடுத்தப்படுகிறது. இவை மாநில அரசுகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>