கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் படுக்கைகள் அதிக பாதிப்புள்ள 6 மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்: தினமும் அறிக்கை அளிக்க வேண்டும்; பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்,  உடனே அட்மிஷன் போட முடியாமல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த சூழலில் அனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.  இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கூடுதலாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்த பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து முதற்கட்டமாக தமிழகத்தில் அதிக பாதிப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கோவை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், அரசு கட்டிடங்களில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. தற்போது வரை 3,500 படுக்கைகள் வரை தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் 6 மாவட்டங்களில் பணிகள் முடிந்த பிறகு மாநிலத்தில் மற்ற இடங்களில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்  மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் தினமும் எவ்வளவு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>