×

குஜராத் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா சிகிச்சைக்காக தனி விமானத்தில் சென்னை வந்த குஜராத் தொழிலதிபர்: நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான குஜராத் தொழிலதிபருக்கு, அங்குள்ள மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. அங்குள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் ‘பெட்’ கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் உள்ள வசதிப்படைத்தவர்கள் தனி விமானங்களில் வேறு மாநிலங்களுக்கு சென்று, தங்களுக்கு வசதியான மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைப் பெறுகின்றனர்.

அதன்படி, குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் போதிய இடவசதியில்லாததால், அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்க்க முடிவு செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர். இந்த மருத்துவமனையும்  சிகிச்சையளிக்க தயாராக இருந்தது. இதையடுத்து சூரத்திலிருந்து கொரோனா நோயாளியான தொழிலதிபர் அவருடைய குடும்பத்தினர் 4 பேருடன் தனி விமானம் சூரத்திலிருந்து புறப்பட்டு நேற்று பகல் 12 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்து சேர்ந்தது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனை  ஆம்புலன்ஸ் ஒன்று சிறப்பு அனுமதி பெற்று, சென்னை பழைய விமானநிலையத்தில் தயார் நிலையில் நின்றது. தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளி மற்றும் குடும்பத்தினர் 4 பேரை ஏற்றிக் கொண்டு, தனி ஆம்புலன்ஸ் கேட் எண் 6 வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது.

பின்பு ஜிஎஸ்டி சாலை வழியாக நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றது. அந்த தனி விமானத்தில் வந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான  தொழிலதிபர் பெயர் போன்ற விவரங்களை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அவர், முக்கிய விவிஐபியின் நெருங்கிய உறவினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tags : Gujarat ,Chennai ,Gujarat Hospital ,Nugangumbakam , Gujarat businessman arrives in Chennai on private plane for corona treatment due to lack of space at Gujarat hospital
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...