×

தமிழகம் முழுவதும் இன்று 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடந்த 21ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக திருமணங்கள் மற்றும் இறப்பு போன்றவற்றிற்கு செல்லக் கூடியவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற்ற கடிதங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்வோர் மருத்துவருடைய பரிந்துரை கடிதம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, police, security
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...