டாஸ்மாக் பார் உரிமத்தொகையை 50 சதவீதம் குறைக்க வேண்டும்: அரசுக்கு உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

சென்னை: டாஸ்மாக் பார் உரிமத்தொகையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதம்: கொரோனா நோய் தாக்கத்தினால் கடந்த ஆண்டு 9 மாதங்கள் மதுக்கூடங்கள் பூட்டி இருந்த காலத்தில் கட்டிட உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கியை, எங்களது அட்வான்ஸ் தொகையிலேயே கழிந்துவிட்டது.

தற்போது கொரோனா 2வது அலை காரணமாக மீண்டும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக மதுக்கூடத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், விற்பனை நேரம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தான். இந்த நேரக்குறைப்பு காரணமாகவும் கொரோனா அச்சம் காரணமாகவும் மதுக்கூடத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு விதித்துள்ள 50 சதவீத வாடிக்கையாளர்கள் கூட வருவதில்லை. ஆகையால், நாங்கள் செலுத்தும் மாதாந்திர உரிமத் தொகையை 50 சதவீதமாக குறைத்து வழங்க வேண்டும்.

மேலும், நடப்பு உரிமம் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2021 என இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்பட்டது. இதில் 1 வருடம் கொரோனா காலத்திலேயே கழிந்து விட்டது. எனவே, பார் உரிம காலத்தை நீட்டித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>