×

கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்: ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் பாதிப்பு

கோவை: கோவையில் தினமும் 10 ஆயிரம் கியூபிக் மீட்டருக்கும் அதிகமான ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க  தமிழக அரசு மருத்துவ உபயோகத்துக்கு மட்டும் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய வேண்டுமென உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதனால், கோவை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  ஆக்ஸிஜன் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரெயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் தலைவர் சுருளிவேல் கூறியதாவது:-

தொழில் நிறுவனங்களில் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு காஸ்  பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் லேசர் கட்டிங், பேப்ரிகேஷன் வேலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தொழில் நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இரண்டு அல்லது மூன்று ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. தடையை மீறி தொழில் நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர தொழில் நிறுவனங்களின் தினசரி பில்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. நோய் தொற்று காரணமாக மருத்துவமனைக்கு மட்டும் ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டியதாக உள்ளது. இருப்பினும் தொழில் வளர்ச்சியும் முக்கியமாகும். எனவே  மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா ஆக்ஸிஜன் கிடைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொழில் நிறுவனங்கள் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க(காட்மா)தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் கட்டிங் செய்யும் பணிகளில் ஆக்ஸிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புக்கும் ஆக்ஸிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்பொழுது தொழில் நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள சூழலில் மனிதர்களின் விலைமதிப்பில்லா உயிர்களை காக்க போதுமான அளவு ஆக்ஸிஜன் விநியோகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும் தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லாமல் ஆக்ஸிஜன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்வரும் நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்  தொழில் துறையிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, ‘‘ஆக்சிஜன் நிறுத்தம் காரணமாக அதை நம்பி உள்ள சிறு தொழிற்சாலைகள், பெரிய தொழிற்சாலை என ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags : Coimbatore , Oxygen supply cut off to businesses in Coimbatore: Thousands of small businesses affected
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்