சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரி ஊட்டி, கொடைக்கானலில் போராட்டம்: வியாபாரிகள் திரண்டனர்

கொடைக்கானல்: சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கக் கோரி கொடைக்கானலில் சிறு வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உட்பட சுற்றுலாத்தலங்களுக்கு பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தி வியாபாரிகள், ஓட்டல்- வாகன உரிமையாளர்கள் சங்கம், சுற்றுலா வழிகாட்டிகள், டாக்சி ஓட்டுனர்கள் என சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் கஞ்சி தொட்டி திறப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தியும், கொடைக்கானலில் நேற்று சிறு வியாபாரிகள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் கலையரங்கம், ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் சிறு கடைகள் வைத்துள்ளோம். சுற்றுலாப்பயணிகள் வராததால் கடைகளை பாதிக்கும் மேல் மூடி விட்டோம். இதனால் அன்றாட உணவுக்கே தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு எங்களது வாழ்வாதாரம் கருதி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஊட்டியிலும் போராட்டம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள், குதிரை வைத்துள்ளவர்கள் என பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுலா வழிக்காட்டிகள் என அனைவரும் திரண்டு நேற்று ஊட்டியில் போராட்டத்தை நடத்தினர். மத்திய பஸ் நிலையத்தில் நடந்த இப்போராட்டத்தில், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories:

>