×

திருச்சியில், ஸ்டிராங்க் ரூம் அருகே லேப்டாப்புடன் திரிந்த 2 வாலிபர்கள்

* அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வாக்குவாதம்
* தேர்தல் அலுவலரிடம் கே.என்.நேரு புகார்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, ேமற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை வாக்குஎண்ணும் மையத்துக்கு வந்த 2 வாலிபர்கள், போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன் உள்ள வருகை நோட்டில் பெயர், டெக்னிக்கல் என்று மட்டும் எழுதிவிட்டு ஸ்டிராங்க் ரூம் அருகே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் கவுன்டர் அருகே கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டு வந்த பேக்கில் 2 லேப்டாப்கள் இருந்துள்ளது.

தகவல் அறிந்த திமுக முகவர் வக்கீல் பாஸ்கரன் மற்றும் கட்சி ஏஜென்டுகள், ஸ்டிராங்க் ரூம் அருகே லேப்டாப்புடன் வாலிபர்கள் எப்படி செல்லலாம். இதை தேர்தல் அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்தனர். விசாரணையில், மே 2ம் தேதி கவுன்டர்களில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கேமரா பொருத்த வந்தவர்கள் என தெரியவந்தது. இருப்பினும் லேப்டாப்பில் என்ன உள்ளது. அதை ஏன் இங்கு கொண்டு வந்தனர். இதை ஏன் வருகை பதிவேட்டில் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான விஸ்வநாதனை திமுக முதன்மை செயலாளரும், மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியின்றி 2 பேர் லேப்டாப்புடன் சென்றனர். ஓட்டுப்பெட்டி எடுத்து செல்லும் இடம் வரை கேமரா பொருத்தப்பட உள்ளது. அதற்கான கான்ட்ராக்ட் பணியாளர்கள்தான் அவர்கள் என்கின்றனர். ஆனால் அனுமதி பெறாமல் எப்படி வந்தனர்?. சொல்லாமல் வந்ததால் தான் கட்சி முகவர்கள் அவர்களை தடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், பழநி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து 3 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை மானிட்டரில் பார்க்க முடியவில்லை. இதுபற்றி திமுக முகவர்கள் தகவலையடுத்து திமுக நிர்வாகிகள் திரண்டனர். இதன்பின், அதிகாரிகள் ஜெனரேட்டரில் மின்சாரம் வழங்கினர்.

Tags : Trichy ,Strong Room , In Trichy, near the Strong Room 2 teenagers wandering around with a laptop
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!