×

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 24,569 பேர் தான் முக்கியமானவர்கள் சென்னையில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க உத்தரவு: 363 டாக்டர்கள் கூடுதலாக நியமனம்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஓமந்தூரார் மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:  நேற்றுவரை தேசிய அளவில் 3.44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 13,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 3.09 சதவீதம் உள்ளது. அதைப்போன்று இறப்பு 10 நாட்கள் கழித்து தான் அதிகமாகும். அதைப்போன்று தான் இந்தியாவிலும் 2,220 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 2.09 சதவீதம் இறப்பு வந்துள்ளது.

தமிழகத்தில் 95,048 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 48,280 லேசான அறிகுறிகள் இருப்பவர்கள். தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 50.08 விழுக்காடு, கோவிட் கேர் சென்டரில் 8,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 8.85 விழுக்காடு, 24,569 பேர் மருத்துவமனையில் உள்ளார்கள். 1 லட்சம் தெருக்கள் இருந்தாலும் 4,256 இடங்களில் தான் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200 தெருக்களும், 686 குடியிருப்புகளும் உள்ளது. அதைப்போன்று 3க்கு கீழ் பாதிக்கப்பட்டவர்கள் கிராமப்புறங்களில் 17,157 தெருக்கள், நகர்புறங்களில் 23,068 தெருக்களும் உள்ளது.

இந்த பகுதிகளிலும் முழு கட்டுப்பாட்டுகளுடன் செயல்பட்டால் தொற்றை கட்டுப்படுத்தலாம். மேலும் எம்ஆர்பி மூலம் 363 கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மினி கிளினிக்கில் 1,645 பேர் உள்ளனர். பெரிய மருத்துவமனைகளில் முக்கியமில்லாத அறுவை சிகிச்சை தள்ளி வைக்க சொல்லியுள்ளோம். ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, கோவிட் நோயாளிகள் வருவதை 10 நாட்களுக்கு அதை ஒத்திவைக்கும்படி ஆணை போட்டுள்ளோம். மேலும் சென்னையில் அனைத்து மருத்துவமனைகளில் தேவையான ஆக்சிஜன் படுக்கைள் இருந்தாலும் 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ஐஎம்ஆர், ஆர்எஸ்ஆர் மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் படுக்கைள் அதிகரிக்க சொல்லியுள்ளனர். தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினம் 250 மெட்ரிக் டன் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. கடந்த முறை 3,494 மெட்ரிக் டன்னில் இருந்து இந்த முறை 881 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளோம். தனியாரில் 1,167 மெட்ரிக் டன், உற்பத்தி 400 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது. அண்ணாநகர் பெரிபெரி மருத்துவமனையில் குறைந்த அளவு நோயாளிகள் உள்ள இடங்களில் ஜெனரேட்டர் அமைக்கப்பட உள்ளது. ஆக்சிஜன் கலன் மூலம் ஒரு நிமிடத்துக்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

9,053 படுக்கைகள் காலியாக உள்ளது
சுகாதார செயலாளர் மேலும் கூறுகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1,618 ஆக்சிஜன் படுக்கைகளில் 1,088 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 1,200 படுக்கைகளில் 976, கீழ்ப்பாக்கத்தில் 480 படுக்கைகளில் 294 படுக்கைகள் நிரம்பியுள்ளன, ஓமந்தூரார் மருத்துவமனையில் 507 படுக்கைகளில் 501 படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் 525 படுக்கைகளில் 461 படுக்கைகள் என 4,368 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 3,320 படுக்கைகள் முழுவதும், மீதி 1,048 படுக்கைகள் காலியாக உள்ளது.

அதைப்போன்று கோவிட் கேர் சென்டர் உள்ள 10 மருத்துவமனைகளில் 1,750 படுக்கைகளில் 229 நிரம்பியுள்ளன அதில் 1,021 காலியாக உள்ளன. கோவிட் கேர் கவனிப்பு மையங்களில் 11,645 படுக்கைகளில் 2,142 தான் நிரம்பியுள்ளன. 9,053 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொடுத்துள்ளனர். மக்கள் பதற்றத்துடன் பார்க்க வேண்டாம். கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைப்பிடித்தால் சங்கிலி தொடர்பை துண்டிக்க முடியும். கூட்டத்தை தவிர்ப்பது நல்லது. பக்கத்து மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ளது’’ என்றார்.

முக்கிய இடங்களில் ேகாவாக்சின்
ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ‘‘அனைத்து மாவட்டங்களில் சித்த மருத்துவமனை முகாம் தொடங்க உத்தரவிட்டுள்ளோம். கபசுரகுடிநீர் கொடுக்க சொல்லியுள்ளோம். கடந்த சில நாட்களில் தடுப்பூசி வேஸ்ட் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை கோவிஷீல்டு 55 லட்சம், கோவாக்சின் 10.82 லட்சம் வந்துள்ளது. மொத்தம் 65.85 லட்சம் வந்துள்ளது. முக்கியமான இடங்களில் தான் கோவாக்சின் போட முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Tags : Chennai ,Health ,Radakrishnan , Hospital, Chennai, Oxygen Bed, Additional Appointment of Doctors, Health Secretary, Radhakrishnan
× RELATED அதிகரித்து வரும் வெயில்...