×

ஆளும் கட்சி எம்எல்ஏவின் சொந்த ஊரில் பஸ் ஸ்டாப் இருக்கு... சீட் கிடையாது: கால்கடுக்க நின்று பயணிகள் அவதி

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை  கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மஞ்சங்காரணை, கூரம்பாக்கம் மற்றும் காடாநல்லூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மஞ்சங்காரணை பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும்பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்துதான் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில், மேற்கூரை உடைந்துவிட்டதால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர். மழை வரும்போது பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நனைகின்றனர்.

தற்போது பஸ் ஸ்டாப்பில் உள்ள இருக்கைகள் அனைத்தும் உடைந்து விட்டதால் மக்கள் உட்கார முடியாமல் மணிநேரம் கால்கடுக்க காத்திருக்கின்றனர். மேலும் பஸ் ஸ்டாப்பை சுற்றிலும் காட்டுச்செடிகள் படர்ந்துள்ளது. மஞ்சங்காரணை பஸ் ஸ்டாப், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவின் சொந்த கிராமம் ஆகும். எம்எல்ஏைவ பார்க்க வருகின்ற கட்சிக்காரர்களும் பொது மக்களும் இந்த பஸ்   ஸ்டாப்பில் இறங்கி தான் அவரது வீட்டிற்கு செல்லவேண்டும். அப்படியிருந்தும் பஸ் ஸ்டாப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பஸ் ஸ்டாப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


Tags : Party ,MLA , There is a bus stop in the hometown of the ruling party MLA ... No seats: Passengers suffer on foot
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...