திருமலையில் கனமழை: ஏழுமலையான் கோயிலில் மழைநீர் தேங்கியது

திருமலை: திருப்பதி, திருமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கன மழைபெய்ததால் ஏழுமலையான் கோயிலில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். திருப்பதி, திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையால் திருமலையில் உள்ள நான்கு மாட வீதியில் மழை நீர் தேங்கியது.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் நாத நீராஞ்சன மேடை, ராம் பகிஜா பக்தர்கள் ஓய்வறை, தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைக்காக ஒதுங்கி காத்திருந்தனர். திடீர் மழையால் அர்ச்சகர் குடியிருப்பு, அன்னப்பிரசாத கூடம், லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் கவுண்டர், ஏழுமலையான் கோயில் முன்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழை நின்ற பிறகு சிறிது சிறிதாக மழைநீர் கால்வாய் வழியாக வடிந்து சென்றது. மழைநீர் வடிந்த பிறகே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீண்டும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Related Stories:

>