×

திண்டிவனம் தனியார் ரசாயன ஆலையில் தீ: ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் - புதுச்சேரி சாலை, பெரும்பாக்கம் கிராமத்தில் கடலூரை சேர்ந்த மாதவன் என்பவர் தின்னர் தயாரிக்கும் ரசாயன கம்பெனி நடத்தி வருகிறார். இ்ங்கு 35க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 32 பேர் பணியில் இருந்தபோது கடலூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (35) என்பவர் பாரலில் தின்னர் நிரப்பினார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சுரேசுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தீ மளமளவென பரவ தொடங்கியதால் உள்ளே பணியில் இருந்த 32 நபர்களும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர்.  

மயிலம் காவல் நிலையம், திண்டிவனம் மற்றும் வானூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த டேங்கர் லாரி, 210 லிட்டர் கொள்ளளவு கொண்ட 250க்கும் மேற்பட்ட பாரல்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான தின்னர் மற்றும் தின்னர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.  புகாரின் பேரில் மயிலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tindivana ,Plant , Tindivanam private chemical plant fire: Rs 3 crore worth of goods destroyed by fire
× RELATED நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில்...