குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் வழியை மறித்து அமைத்த முள்வேலியை அகற்ற கோரிக்கை

குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஈச்சமரம் மலை ரயில் பாதையின் அருகே யானை வழித்தடத்தில் முள்வேலி அமைத்து வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும். சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கிறது.

இதேபோன்று மேட்டுபாளையம்- குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும்  குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கும் வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில் தண்ணீர் தேவைக்காக யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்கிறது. சமீபத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஈச்சமரம் பகுதியில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது. தற்போது அதே பகுதியில் தண்டவாளத்தின் அருகே தனியார் சிலர் வேலிகள் அமைத்து கட்டுமான பணிகளுக்கான ‌பொருட்களை வைத்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் ஓடையை சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். அங்குள்ள பாறைகள் பயண்படுத்தி வழித்தடம் அமைத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வரும் சூழலில் அதே சமயத்தில் தனியாரும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   ரயில்வே நிர்வாகம் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் கடந்து செல்லும் பாதையில்  எவ்வாறு வேலிகள் அமைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர். சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் யானைகள் சென்று வரும் பாதை மறைக்கப்பட்டுள்ளது. இதனால் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்த பகுதி பர்லியாறு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதி என்பதால் வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>