×

சிவகங்கை அருகே கண்டமாகி கிடக்கும் காட்டுக்குடியிருப்பு சாலை-பொதுமக்கள் அவதி

சிவகங்கை : சிவகங்கை- தொண்டி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் காட்டுக்குடியிருப்பு சாலை குண்டும், குழியுமாய் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள காட்டுக்குடியிருப்பு இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. காட்டுக்குடியிருப்பு வழியாக சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி சாலை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக மண்சாலையில் இருந்து தார்ச்சாலையாக இந்த சாலை மாற்றப்பட்டது. அதன்பிறகு புதிய சாலையும் போடப்படவில்லை. பேட்ஜ் ஒர்க் எனப்படும் பராமரிப்பு பணியும் செய்யவில்லை. இதனால் சாலையில் பல இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கற்கள் பெயர்ந்து வாகன டயர்களை பதம் பார்க்கிறது.

 சாலையின் இருபுறமும் எவ்வித மண் பிடிமானமும் இல்லாமல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலர், ஆட்டோக்கள் சாலையோரத்தில் வாகனங்களை ஒதுக்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘சிவகங்கையின் விரிவாக்க பகுதிகளுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையை கண்டுகொள்ளவே இல்லை. எவ்வித பராமரிப்பு பணிகளும் கூட செய்யாமல் உள்ளனர். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சாலை வழி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதியடைகின்றனர்.

அதிகப்படியாக கற்கள் பெயர்ந்தும், பள்ளங்களும் உள்ளதால் இரவு நேரத்தில் டூவீலர்களில் வரும்போது விழுந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Sivagangai - Public , Sivagangai: The Sivagangai-Thondi road, which separates from the forest, is in a state of disrepair.
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...