செய்யாற்று படுகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை-பெரணமல்லூர் மக்கள் வேதனை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் செய்யாற்று படுகையில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் கொள்ளையால் வேதனை அடைந்துள்ள பொதுமக்கள், அதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த மேல்சாத்தமங்கலம், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதிகள் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள வளமான நிலப்பரப்புகளில் விவசாயம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் செய்யாற்றில் வெள்ளம் சென்றது. இதனால் ஆற்றுப்படுகையில் செழுமையான மணல் வளம் உற்பத்தியாகி உள்ளது. இதனை கண்ட மணல் கொள்ளையர்கள் மாட்டுவண்டிகள் மூலம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணலை ஓரிடத்தில் பதுக்கி வைக்கும் கொள்ளையர்கள், பின்னர் அங்கிருந்து மினி லாரி, டெம்போ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வெளியூர்களுக்கு கடத்தி வருகின்றனர். மணல் வளம் சுரண்டப்பட்டு வருவதால் பெரணமல்லூர் பகுதி மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

எங்களது கிராமம் வழியே செல்லும் செய்யாற்று படுகையால், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஆழ்துளை கிணறுகளிலும், விவசாய கிணறுகளிலும் நீர் வளம் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஆற்றுப்படுகையில் உள்ள மணலை கொள்ளையடித்து இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு கடத்தி சென்று வருகின்றனர். இந்த மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் சென்றுவிடுவதால், இங்கு யாரும் ரோந்து வருவது கிடையாது. இதனை பயன்படுத்தி மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தி செல்லப்படுகிறது. குறிப்பாக, பெரணமல்லூர், ஆவணியாபுரம், சந்திரம்பாடி, கட்டமங்கலம், அல்லியந்தல், சோழவரம், செங்கம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்தல் நடக்கிறது.

இயற்கை வளத்தையும், நீர் வளத்தையும் பாதுகாக்க நாங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவித்தால், அதிகாரிகள் வரும் தகவலறிந்து மணல் கொள்ளையர்கள் மாயமாகி விடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குண்டர் சட்டம் பாயுமா?

மணல் கொள்ளையர்களை போலீசார் பிடிப்பதும், அவர்கள் கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்தி விடுதலை ஆவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் அச்சமின்றி மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்காணித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வேவு பார்த்து மணல் கொள்ளை

மாட்டுவண்டிகளில் மணல் கடத்தும் நபர்கள் அவர்கள் செல்லும் பாதையை கண்காணிக்க சில நபர்களை நியமித்துள்ளனர். அவர்கள், கொள்ளையர்களுக்கு முன்பு ரோந்து சென்று, அப்பகுதியில் போலீசார் நடமாட்டம், வருவாய்த்துறை நடமாட்டம் உள்ளதா? என துப்பறிந்து தகவல் கொடுத்தவுடன் கொள்ளையை நடத்துகின்றனர்.

Related Stories:

More