×

சித்தூரில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமா? ஏரியில் விஷம் கலந்ததால் செத்து மிதக்கும் மீன்கள்-மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள்அதிர்ச்சி

சித்தூர் : சித்தூர் கட்டமஞ்சி ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கிறது. மேலும் இறந்துகிடக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி திட்ட அதிகாரி நாகேந்திரா கூறியதாவது:
மர்ம நபர்கள் யாரோ வேண்டுமென்றே ஏரியில் விஷம் கலந்து உள்ளனர். இதனால் ஏரியில் உள்ள அனைத்து மீன்களும் செத்துமிதக்கிறது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நீரை பரிசோதனை செய்த பின்னர், அந்த நீரில் எந்த வகையான விஷம் கலந்து உள்ளார்கள் என்பது தெரிய வரும். மிக விரைவில் குற்றவாளிகளை பிடித்து தண்டனை பெற்று தருவோம். அதுவரை ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏரி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

ஏரியில் செத்து மிதக்கும் அனைத்து மீன்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி மாநகர எல்லை அருகே கொண்டு சென்று குழி தோண்டி புதைக்கப்படும். பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவார்கள். கட்டமஞ்சி ஏரியை சுற்றியும் நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. காலை மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது ஒரு வாரம் வரை அப்பகுதியில் நடைபயிற்சி யாரும் மேற்கொள்ளாதபடி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனென்றால் துர் நாற்றம் தாங்காமல் பொது மக்களுக்கு ஏதாவது நோய்கள் வர வாய்ப்புள்ளதால் ஒரு வாரம் வரை நடை பாதை அடைக்கப்படும்.
ஏரி அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மிக விரைவில் ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்களை கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும்  வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த ஏரிக்கு வந்து மீன்களை பிடித்து சென்று கொண்டிருந்தனர். எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் எப்போதும் தகராறு ஏற்பட்டது கிடையாது.  தகராறு ஏற்பட்டிருந்தால் வேறு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விஷம் கலந்து இருக்கலாம் என நினைக்கலாம்.

அதுபோல் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கட்டமஞ்சி ஏரி கடந்த இந்த ஏரியில் சித்தூர் மாநகரம் முழுவதும் உள்ள கழிவுநீர் கலந்துவந்தது. எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதால் இந்த ஏரியில் கழிவுநீர் கலக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தோம். இதனால் மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கலக்காதவாறு பணிகள் மேற்கொண்டனர்.

தற்போது ஏரி அருகே வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தம் செய்ய வேண்டும். ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பறவைகள் அழியும் ஆபத்து

சித்தூர் கட்டமஞ்சி ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்த சம்பவத்தால் மீன்கள் செத்து மிதந்து கரையோரம் ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் யாரும் வராதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொக்கு, காக்கை உள்ளிட்ட பறவைகள் குளத்தில் உள்ள இறந்த மீன்களை உண்பதால் பறவைகள் செத்துமடியும் ஆபத்து உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பறவைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chittoor , Chittoor: All the fish in Chittoor Kattamanchi lake are floating dead due to poisoning by mysterious persons. And by dying fish
× RELATED சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும்...