திருச்சுழி அருகே சுடுகாட்டிற்கு வழியில்லை-ஓடைக்குள் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்

திருச்சுழி : திருச்சுழி அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியின்றி, புதர்மண்டி கிடந்த ஓடையை சுத்தம் செய்து, அவ்வழியே பிணத்தை கொண்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது.திருச்சுழி அருகே மறவர் பெருங்குடியில் அருந்தியர் காலனி உள்ளது. இங்கு 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்காலனிக்கு வெள்ளையாபுரம் பகுதியில் சுடுகாடு உள்ளது. இச்சுடுகாட்டிற்கு செல்ல ஆழமான ஓடையை கடந்து செல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக தனியார் பட்டாநிலத்தின் வழியாக பிரேதங்களை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

அங்கு விவசாய பணிகள் நடப்பதால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அவ்வழியே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலு என்பவர் மரணமடைந்தார். அவரின் பிரேதத்தை கொண்டு செல்ல வழியின்றி, ஆழமான ஓடை வழியே கொண்டு செல்ல முடியாது என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

 இத்தகவலறிந்து அங்கு வந்த திருச்சுழி இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், அருப்புக்கோட்டை துணை தாசில்தார் சோனையன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஓடையை சுத்தப்படுத்தி, அவ்வழியே சென்று பிரேதத்தை அடக்கம் செய்தனர். அக்காலனி மக்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் பிரேதத்தை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றோம் . தனியார் பட்டாநிலத்தின் வழியாகவும் கொண்டு செல்லவும் முடியவில்லை.

ஆழமான ஓடையையும் கடந்து செல்ல முடியவில்லை. சுடுகாட்டிற்கு மாற்று இடம் வேண்டும், என்றனர்.

Related Stories: