×

தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக 2ஆம் டோஸ் போடுபவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்த சூழலில் தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சுமார் 53 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 8.82 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் வந்திருந்தது. இன்றைக்கு வந்துள்ள 4 லட்சம் தடுப்பூசிகளை சேர்த்து தமிழகத்தில் கோவிஷீல்டு 55 லட்சம் டோஸ்களும் கோவாக்சின் 10.82 லட்சம் டோஸ்களும் என தமிழகத்தில் இதுவரை 65.85 லட்சம் டோஸ் வந்துள்ளன.

தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதன்முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது வரை 89 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 51.32 லட்சம் கோவிட் தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக்கொண்டுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவில் ஒருநாளைக்கு 6 லட்சம் டோஸ்கள் தான் உற்பத்தியாகிறது. அதேபோல கோவிஷீல்டு 20 லட்சம் டோஸ்கள் உற்பத்தியாகிறது. மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் பொதுவாக அருகாமையில் இருக்கக்கூடிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுக வேண்டும். அங்கு தான் எந்தவித தட்டுப்பாடும் இன்றி தடுப்பூசிகள் கிடைப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அடுத்தப்படியாக மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. பின்னர் நகர்ப்புற புறநகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன.

Tags : Tamil Nadu ,Health Minister ,Vijayabaskar , corona vaccine
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...