×

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமா?....தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வருகிறவர்கள் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டுமா,  தடுப்பூசி போட வேண்டுமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வருகிறவர்கள் கொரோனா சோதனை நடத்த வேண்டுமா, தடுப்பூசி போட வேண்டுமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது 14 மேஜைகள் போட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரு அறை அல்லது இரண்டு அறையிலும் சேர்த்து 14 மேஜைகள் போட்டு வாக்கு எண்ணிக்கை நடத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். சில விவரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை  கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவுகளை அறிவிக்குதோ, அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

20% பேர் கூடுதலாக அனுமதி
தபால் ஓட்டுகளும் மே 2ம் தேதிதான் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணுவது குறித்து தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும். ஓட்டு எண்ணும் அலுவலர்கள் 20% பேர் கூடுதலாக இருப்பார்கள். அதேபோன்று, அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி ஏஜென்ட்கள் 20% பேரை கூடுதலாக வைத்துக்கொள்ள கூறியுள்ளோம். காரணம், யாருக்காவது கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு பதில் இவர்களை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Chief Electoral Officer ,Tamil ,Nadu , Voting, Corona Vaccination, Chief Electoral Officer
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...