×

ரூ.300 முதல் ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர் விலை ரூ.3,000

புதுடெல்லி: நாட்டில் 24 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டரின் விலை 10 மடங்கு உயர்ந்து, ரூ.3,000க்கு விற்பனையாவது நோயாளிகளின் குடும்பத்தினர், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை, உருமாறிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக லட்சங்களை கடந்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த 5 நாட்களில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.74 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதனால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 24.28 லட்சம் பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கும் தொற்று தீவிரமாகி உள்ளதால், மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால், மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு வர்த்தக ஆக்சிஜன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

மேலும், ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நிறுவனங்களின் ஆக்சிஜன் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும்படி கேட்டு கொண்டுள்ளார். அதன்படி, நாளொன்றுக்கு 150- 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது அதன் உற்பத்தி திறனை 500 சிலிண்டர்களாக உயர்த்தி உள்ளன. இருப்பினும், வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்ததால் தான், இந்த பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அதே நேரம், மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை அதன் உற்பத்தியாளர்கள் பலமடங்கு உயர்த்தி உள்ளனர். ஆக்சிஜன் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிறுவனங்கள், அவற்றை பெற்று வரும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை 8 முதல் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல் 2வது அலைக்கு முன்பு, ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விலை தற்போது ரூ.3,000 வரை விற்கப்படுகிறது.

உற்பத்தி குறைவால் ஏற்பட்டுள்ள திடீர் பற்றாக்குறையை பயன்படுத்தி, இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா நோயாளிகள், அவரது குடும்பத்தினர் தேவையான சிலிண்டர் கிடைக்காமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 


Tags : Sold for Rs.300 to Rs.400 Oxygen cylinder price Rs.3,000
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...