ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் ஒரேநாளில் 25 பேர் பலி: மகாராஷ்டிரா தீ விபத்தில் 14 கொரோனா நோயாளிகள் சாவு

புதுடெல்லி: கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு டெல்லி, சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 25 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் கருகி இறந்தனர். நாடு முழுவதும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசின் 2வது அலை, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதில், தினமும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நாட்டிலேயே தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பரவலின் நான்காம் அலை அதி தீவிரமாக  வேகம் காட்டி வருகிறது. இதனால், நகரில் தினசரி  தொற்று பாதிப்பு சராசரியாக 26,000க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதோடு, இங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருந்து வருகின்றனர்.

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப்பெரிய  மருத்துவமனைகளில் ஒன்றான கங்காராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகள் இறந்துள்ளனர். மேலும், ஆபத்தான நிலையில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களில் பலர் மருத்துவ ஆக்சிஜனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‘குறைந்த அழுத்தம் கொண்ட ஆக்சிஜன்’ காரணமாகவே நோயாளிகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. மீதமுள்ள ஆக்சிஜனும் அடுத்த சில மணி நேரத்தில் தீர்ந்துவிடும். இதனால், நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வென்டிலேட்டர் மற்றும் பைலெவல் பாசிடிவ் ஏர்வே ஆகியன முழு திறனுடன் வேலை செய்யவில்லை. எனவே,  ஆக்சிஜன் சப்ளையை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும். 60 கொரோனா நோயாளிகளின் உயிர், ஆபத்தில் உள்ளது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், அவர்களை காப்பாற்ற முடியாது,’’ என்றார்.

ஆக்சிஜன் தேவை குறித்து அரசுக்கு தகவல் அனுப்பியதை தொடர்ந்து நேற்று காலை 9.20 மணிக்கு ஒரு ஆக்ஸிஜன் டேங்கர் வந்தது. எனினும், பயன்பாட்டை பொறுத்து அவை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் கங்கா ராம் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கங்காராம் மருத்துவமனை மட்டுமின்றி டெல்லியில் உள்ள பெரும்பாலான கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சில  மருத்துவமனைகளில் எப்போது தீரும் என்பது தெரியாத நெருக்கடி நிலை உள்ளது. மருத்துவமனைக்கு வெளியில் பலரும் விரக்தியுடன் காத்திருந்தனர். ஆம்புலன்சிலும், ஸ்ட்ரெச்சரிலும் நோயாளிகள் காத்திருக்க வைக்கப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலுடன் வரிசையில் காத்திருந்தனர். நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக மருத்துவனையில் சிகிச்சை பெற ஒரு படுக்கையை பெறும் முயற்சியில் காத்து கிடக்கின்றனர். இதுபோல், ஆக்சிஜன் பற்றாக்குறையில் நோயாளிகள் இறக்கும் கொடுமை நாட்டின் பல்ேவறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கொரோனா நோயாளிகள் கருகி இறந்தனர். பால்கர் மாவட்டம், விராரில் விஜய் வல்லப் என்ற மருத்துவனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 90 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 2வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 18 நோயாளிகள் இருந்தனர். நேற்று அதிகாலை இந்த பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் 14 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மற்ற பிரிவுகளில் இருந்த நோயாளிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த பிரிவில் இருந்த மற்ற நோயாளிகள் மீட்கப்பட்டனர்.

மயானங்களில் இடம் போதவில்லை

மொத்தமாக எரிக்கப்படும் சடலங்கள்

டெல்லியில் தினமும் நூற்றுக்காணக்கான கொரோனா நோயாளிகள் இறந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டுமே 306 பேர் பலியாகினர். இதனால், அத்தனை உடல்களையும் தகனம் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதால், டெல்லியில் உள்ள அனைத்து மயானங்களிலும் சடலங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. வழக்கமாக செயல்படும் மயானங்களை சடலங்களை எரிப்பதற்கான போதிய இடவசதி போதவில்லை. இதனால், பல்வேறு இடங்களில் தற்காலிகமாக தகன மேடைகள் அமைக்கப்பட்டு, சடலங்கள் மொத்தமாக ஒரே இடத்தில் எரிக்கப்பட்டு வருகிறது.

தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜிதேந்தர் சிங் கூறுகையில், ‘நேற்று முன்தினம் மட்டும் தற்காலிக இடத்தில் 60 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இங்கு தகனம் செய்ய குழந்தைகள், 5 வயது, 15 வயது, 25 வயது உள்ளிட்டோரின் சடலங்களும் வருகின்றன. இவற்றை பார்க்கும்போது நெஞ்சம் வெடித்து விடுவது போல் இருக்கிறது. நானே சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 சடலங்கள் தகனம் செய்கிறேன்,’’ என்றார்.

Related Stories:

>