×

விசாரணை கைதி அடித்துக் கொலையை கண்டித்து பாளை. மத்திய சிறை முன்பு 7 மணி நேரம் சாலை மறியல்

* 7 பேர் மீது வழக்கு
* சிறை அதிகாரிகளை சேர்க்க வலியுறுத்தல்

நெல்லை:  நெல்லை  மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த பாபநாசம் மகன்  முத்து மனோ (27). இவர் மீது மூன்றடைப்பு, களக்காடு உள்ளிட்ட போலீஸ்  ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த வாரம்  களக்காட்டைச் சேர்ந்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில்  முத்துமனோ உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் கிளைச்  சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் முத்துமனோ உள்ளிட்ட 4 பேரையும் வைகுண்டம் கிளை சிறையிலிருந்து நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பின்னர் 4 பேரையும் பாளை மத்திய  சிறைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறைக்குள் முத்துமனோ  உள்ளிட்ட 4 பேருக்கும், சிறையில் உள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த  கைதிகளுக்கும் மோதல் வெடித்தது. ஒருவரை  ஒருவர் கடுமையாக தாக்கினர்.அப்போது அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர்கள் மற்றும்  போலீசார், கைதிகளை அவரவர் அறைகளில் அடைத்தனர். படுகாயம் அடைந்த முத்துமனோவை  மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த அருள் துரைசிங், மாதவன், சந்திரசேகர் ஆகிய மூவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார்  விசாரணை நடத்தி தாழையூத்தைச் சேர்ந்த ஜேக்கப், ராமமூர்த்தி, மகாராஜன், மாடசாமி, கொக்கி குமார், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் கண்ணன்,  அருண்குமார் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சாதி மோதல் முன்விரோதம் காரணமாக சிறைக்குள் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் முத்துமனோவின் பெற்றோர்  மற்றும் உறவினர்கள், வாகைக்குளம் கிராம மக்கள், வைகுண்டம் சிறையிலிருந்து முத்துமனோவை பாளை சிறைக்கு  மாற்றியதின் மர்மம் என்ன?, முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கில்  சிறை கண்காணிப்பாளர், சிறை காவலர்களையும் ேசர்க்க வேண்டும் என வலியுறுத்தி பாளை மத்திய  சிறை முன்பு சாலையில் அமர்ந்து நேற்று காலை 10.30 மணி முதல் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, பாளை  மத்திய சிறையில் சாதிய தாக்குதல் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. சம்பவத்தின் போது பணியில் இருந்த பாளை சிறைத்துறை கண்காணிப்பாளர், காவலர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கலெக்டர் விஷ்ணு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இறந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அளிக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்தவுடன், சிறைத்துறை அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உடற்கூறு ஆய்வின் போது உறவினர்கள் மற்றும் இறந்தவர் சார்பில் வக்கீல் ஒருவரும் உடனிருக்கலாம். சிறையில் நடந்த தாக்குதலில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளை வேறு பிளாக்கிற்கு மாற்றவும் பேச்சுவார்த்தையின் போது உறுதியளிக்கப்பட்டது. இதைடுத்து 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை 5.20 மணிக்கு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Central ,Jail , Trial, prisoner, beating, central prison, roadblock
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!