ஜெயலலிதா குறித்து பேசியதாக தொடரப்பட்ட ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்குக்கு தடை

சென்னை: வேளச்சேரியில் கடந்த 2015 நவம்பர் 2ம் தேதி சென்னை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக  அவதூறு வழக்கு பதியப்பட்டது.  இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை தற்போது எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம்,  முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே மனுதாரர் பேசினார். தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை. ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க உரிமை உள்ளது என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, அரசு தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் மாதம் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories:

>