×

ஆக்சிஜன் இன்றி பல மாநில மருத்துவமனைகளில் நோயாளிகள் தவிப்பு சென்னையில் கான்சன்ட்ரேட்டர் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 அரசு மருத்துவமனை

* மற்ற மருத்துவமனைகளிலும் கருவி வைக்கலாமே?
* பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது

சென்னை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநில மருத்துவமனைகளில் நோயாளிகள் தவிக்கும் நிலையில், கான்சன்ட்ரேட்டர் மூலம்  சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகள் ஆக்சிஜனை தயாரித்து நோயாளிகளுக்கு அளிக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்தில் மற்ற மருத்துவமனைகளிலும் கான்சன்ட்ரேட்டர் கருவி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கொரோனா நோயாளிகள் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல் காரணமாக அதிக அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ேதவை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. ஆனால், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் உள்ள சென்னை ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிறிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மருத்துவமனையில் உள்ள உற்பத்தி கூடங்கள் வழியாக வழங்கப்படுகிறது. 720 படுக்கைகளில் 600 படுக்கைகளில் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இந்த மருத்துவமனைகள் திகழ்கிறது.

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் காற்றின் மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் எனப்படும் 10 கருவிகள் உள்ளன. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் மூலம் ஒரு நிமிடத்துக்கு 30 லிட்டர் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தப்படுகிறது. இவை ஆபரேஷன் அறை மற்றும் முக்கியமான இடங்களில் வைக்கப்படும். இந்த கருவிகள் கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்ல, அனைத்துவிதமான சிகிச்சைகளுக்கும் குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏதாவது பிரச்னை ஏற்படும்பட்சத்தில் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு செய்ய நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 2 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது. 10 கருவிகள் மூலம் 25 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தர  முடியும். அதே நேரத்தில் கொரோனா நோயாளிகள் என்றால்,  இந்த 10 கருவிகள் மூலம் 10 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தர முடியும். இதை தவிர்த்து வெளியில் இருந்து 230 கிலோ ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. இது 200 லிட்டர் சிலிண்டர், 500 லிட்டர் சிலிண்டர்களில் நிரப்பப்படுகிறது. இந்த சிலிண்டர்கள் பைப்லைன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் 5 நாட்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், பெரிய அளவில் ஆக்சிஜன் தேவைப்படாத நேரங்களில் இந்த ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் தான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் காற்றில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவிகள் மூலம் நிமிடத்துக்கு 5 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து 24 கிலோ லிட்டர் மற்றும் 10 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் டேங்குகள் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, அவை தினசரி ஒன்று அல்லது 2 லாரிகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தினமும் வெளியில் இருந்து 2 லாரிகள் மூலம் 30 கிலோ ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. இதன் மூலமாக திரவ ஆக்சிஜனை சேமிக்கப்படுகிறது. இங்கு 575 படுக்கைகளில் 503 படுக்கைகள் நிரம்பிவிட்டன. அதில் 350 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 ஆக்சிஜன் கான்சன்ட்ேரட்டர் கருவி உள்ளது. இந்த கருவிகள் மூலம் நிமிடத்துக்கு 30 லிட்டர் வரை தயாரிக்கப்படுகிறது. இவை சாதாரண நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், அதிக பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு அதிக அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்குகள் உள்ளன.

தற்போதைய நிலையில், 1150 படுக்கைகளில் 750 படுக்கைகளுக்கான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதனால், தினமும் 20 ஆயிரம் லிட்டர் சிலிண்டர் வரை செலவிடப்படுகிறது.  தினமும் ஆக்சிஜன் டேங்குகளில் திரவ நிலையில் கொண்டு வரப்பட்டு, வாயு நிலைக்கு மாற்றப்படுகிறது. அதே நேரத்தில் கான்சன்ட்ரேட்டர் கருவிகள் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு முடிந்த அளவுக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம்தான் வழங்க வேண்டும் என்கிற நிலை இல்லை. இதேபோன்று தமிழகத்தில் மற்ற மருத்துவமனைகளிலும் கருவிகளை வாங்கினால் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chennai , Oxygen, multi-state hospital, patients, suffering
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...