×

அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் 4 விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புதிதாக 4 பேரை அனுப்பியுள்ளனர். ஃபால்கான் ராக்கெட் 9 மூலம் புளோரிடாவின் கேப் கெனரவல் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்க வரலாற்றிலே இவை மிகவும் முக்கியமான மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. நேற்று இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படவிருந்தது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட்டை ஏவுவதற்கு நேற்றைய சூழ்நிலை சாதகமாக இல்லை என்ற காரணத்தினால் இன்று விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் , மேகன் மெக் ஆர்தர் , நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகிய 4 பேரும் பால்கன் 9 ராக்கெட்டில் பறந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் 6 மாத காலம் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர். கடந்த ஆண்டு மே மாதம் 2 வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே விண்ணிற்கு சென்று திரும்பி வந்த ராக்கெட் மீண்டும் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

பூமியில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் விண்வெளி நிலையம் நிலை கொண்டிருக்கிறது. அந்த மையத்தை 4 வீரர்களும் சென்றடைய கிட்டத்தட்ட 24 மணி நேரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலமாக விண்ணுக்கு சென்று திரும்புவது எப்படி என்பதற்கான ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து அதன் மூலம் வரும் காலங்களில் மிகவும் சுலபமாக விண்ணுக்கு சாதாரண பயணிகள் கூட செல்லும் காலம் வரும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.


Tags : SpaceX ,United States , USA, SpaceX Falcon 9 rocket, scientist
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து