நடிகர் விவேக்கின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை போல தடுப்பூசி குறித்தும் இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படத்துக!: தமிழிசை வலியுறுத்தல்..!!

புதுச்சேரி: நடிகர் விவேக்கின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி அடுத்த கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி கவனிப்பு மையத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விவேக்கின் மரணத்திற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவது வெகுவாக குறைந்துவிட்டதாக கூறிய அவர், விவேக்கை பின் தொடரும் இளைஞர்கள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு இயக்கமாக தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இளைஞர்கள் பங்களிப்பு இருந்தால் நிச்சயம் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெறும் என்றும் கூறினார். தடுப்பூசியை இன்னும் அதிகப்படியான நபர்கள் பயமின்றி போடக்கூடிய சூழ்நிலை வரவேண்டும் என்பது தன்னுடைய கோரிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தமிழிசை, கொரோனாவிற்கு ஊரடங்கு தீர்வு இல்லை என்றாலும், மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊரடங்கு ஏற்படுத்தும் என தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்றாலும், அதை விட வாழ்க்கை முக்கியம் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Related Stories: