கடந்தாண்டு கன்றுக்குட்டி கடித்ததில் தாடை கிழிந்தது; மலை அடிவாரத்தில் சிக்கிய 2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு: கோர்ட் உத்தரவுபடி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது

அணைக்கட்டு: மலையடிவாரத்தில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டை கடித்ததில் கன்றுக்குட்டி தாடை கிழிந்து காயமடைந்த போது கைப்பற்றப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் கோர்ட் உத்தரவுபடி அதிகாரிகள் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பெரிய ஊனை கிராமத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள இடத்தில் காளை கன்றுக்குட்டி ஒன்று மேய்ச்சலில் இருந்தது. அப்போது அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் அந்த கன்று குட்டியின் தாடை கிழிந்தது. தகவலறிந்த அணைக்கட்டு போலீசார், வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், காட்டு பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க மாங்காயில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கன்று கடித்தபோது வெடித்ததில் தாடை கிழிந்தது தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிக்காமல் இருந்த 2 நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அதனை அரசு அனுமதி பெற்ற பட்டாசு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில், வேலூர் ஜேஎம்5 நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இந்த இரண்டு நாட்டு வெடி குண்டுகளையும் பாதுகாப்புடன் செயலிழக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, பெரிய ஊனை மலை அடிவாரத்தில் அந்த 2 நாட்டு வெடிகுண்டுகளும் செயல் இழக்க வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.

தொடர்ந்து, தீயணைப்பு வாகனத்துடன் அலுவலர்கள்,  ஆம்புலன்சுடன் மருத்துவர்கள், ஜேசிபி வாகனம், வருவாய் துறையினர் ஆகியோர் முன்னிலையில், அந்த இரண்டு நாட்டு வெடி குண்டுகளையும், சென்னை வெடிகுண்டுகள் செயல் இழப்பு நிபுணர்கள், வாசுதேவன் தலைமையிலான அணைக்கட்டு போலீசார் கொண்ட குழுவினர் மலை அடிவாரத்தில் வைத்து பாதுகாப்புடன் 2 வெடிகுண்டுகளையும் செயல் இழக்க செய்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாததையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர். வெடிக்கும்போது சத்தத்துடன் புகை ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories:

More
>