ஈரோட்டில் இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மூடல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையொட்டி, அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. ஈரோடு காந்திஜி ரோட்டில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல், இந்த மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையும், மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதனால், இந்த மருத்துவமனைக்கு ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 2 கர்ப்பிணிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பெண்களை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இருந்த பிற கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேபோல், மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா பரிசோதனை மையமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை மீண்டும் 24ம் தேதி (சனிக்கிழமை) முதல் திறக்கப்படும் என்றும், அன்றைய தினம் கொரோனா பரிசோதனை, கொரோனா தடுப்பூசி மையமும் செயல்படும் என மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார்.

5 டிஎஸ்பிகளுக்கு தொற்று உறுதி

தமிழ்நாடு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பணியாளர் நலன் துறை சார்பில் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் அனைத்து துறை சார்ந்த இளநிலை  உதவியாளர்கள், உதவியாளர்கள், துணை வட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறையில் பணிபுரியும் 25  டிஎஸ்பிக்களுக்கு ஒன்றரை மாத கால பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், சிலருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 டிஎஸ்பிக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொற்றால்  பாதிக்கப்பட்ட 5 பேரையும் பயிற்சி நிலையத்தில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று புஞ்சை புளியம்பட்டி வட்டார ஆரம்ப  சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் தொற்றால் பாதிக்கப்பட்ட 5  டிஎஸ்பிக்களையும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட  பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

Related Stories:

>