வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம்!: தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு..!!

சென்னை: தமிழகத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலையானது அதிதீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் பரவல் என்பது தொடர் உச்சத்தை தொட்டு வருகிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தமட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த சூழ்நிலையே வடமாநிலங்களிலும் நிலவி வருகிறது. இந்நிலையில், வடமாநிலங்களை போல தமிழகத்திலும் நடைபெறாத வண்ணம் தற்போது தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 044-2432 1438, 044-2432 1408 ஆகிய எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இதுமட்டுமல்லாமல் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகாரிகளை நியமித்து கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ அடையாமல் தொடர்ந்து பணியாற்றுமாறு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>