படிக்கல் 101 - கோஹ்லி 72 ரன் குவித்து அதிரடி ராயல்சை நொறுக்கியது ஆர்சிபி

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 181 ரன் குவித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் பத்திதாருக்கு பதிலாக ரிச்சர்ட்சன் இடம் பெற்றார். ராஜஸ்தான் அணியில் உனத்காட் நீக்கப்பட்டு, கோபால் சேர்க்கப்பட்டார். பட்லர், வோரா இருவரும் ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் 8 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் வெளியேற, வோரா 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மில்லர் டக் அவுட்டாக, ராயல்ஸ் 18 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் சாம்சன் 21 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சுந்தர் சுழலில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார்.

இந்த நிலையில், துபே - பராக் இணைந்து கடுமையாகப் போராடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தனர். பராக் 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து துபேவுடன் இணைந்த திவாதியா அதிரடியில் இறங்க, ராஜஸ்தான் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. துபே 46 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

அதிரடியாக விளையாடிய திவாதியா 40 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் மோரிஸ் (10 ரன்), சகாரியா (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. கோபால் 7 ரன், முஸ்டாபிசுர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ், ஹர்ஷல் தலா 3, ஜேமிசன், ரிச்சர்ட்சன், சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது. அந்த அணி 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்து அபாரமாக வென்றது. இதில் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 101 ரன் (52 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. விராட் கோஹ்லி இறுதிவரை களத்தில் நின்று 72 ரன்(47 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இதையடுத்துதொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி 8 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

Related Stories:

>