×

போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் காலிறுதியில் பிளிஸ்கோவா: ஆஷ்லி முன்னேற்றம்

ஸ்ட்ட்கர்ட்: ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே கிராண்ட் பிரீ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் விளையாட முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி, கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளனர். ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில்   போர்ஷே கிராண்ட் பிரீ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில்  ஒற்றையர் பிரிவு  காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன. உலகின் 9ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின்  கரோலினா பிளிஸ்கோவா நேற்று   லாத்வியாவின்  ஜெலினா ஒஸ்டபென்கோ (52வது ரேங்க்) உடன் மோதினார்.    டை பிரக்கர் வரை நீடித்த முதல் செட்டை  ஜெலினா 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி பிளிஸ்கோவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட பிளிஸ்கோவா அடுத்த 2 செட்களையும் 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-1 என்ற கணக்கில் வென்ற பிளிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி, 23 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்  செக் குடியரசின் பெத்ரோ குவித்தோவா (10வது ரேங்க்), கிரீசின்  மரியா சக்கரியுடன் (19வது ரேங்க்) விளையாடினார்.  சுமார் 2 மணி, 28 நிமிடங்கள் நீடித்த அந்த போட்டியில்  குவித்தோவா 6-3, 3-6, 6-3 என்ற கணக்கில்  மரியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். லாரா சியக்முன்ட் (ஜெர்மனி, 58வது ரேங்க்) உடன் மோதிய உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா) 6-0, 7-5 என நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது.

Tags : Blisskova ,Porsche Grand Prix ,Ashley , Porsche Grand, Free Tennis, Quarterfinal, Bliskova
× RELATED சில்லி பாய்ன்ட்…