கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன்(29). இவர், கடந்த 2013ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். கிருஷ்ணகிரி ஆயுதப்படை பிரிவில் போலீசாக இருந்த இவர், கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி கலைமதியின் பாதுகாவலராக, கடந்த டிசம்பர் முதல் பணியாற்றி வந்தார்.   இந்நிலையில், நேற்று காலை நீதிமன்றத்தின் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில், தலையின் வலதுபுறம் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அன்பரசன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு துப்புரவு பணியாளர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்து நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தகவலின்படி மாவட்ட எஸ்.பி. பண்டிகங்காதர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு வந்து கதறி அழுதனர்.

 அன்பரசன் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. மனைவி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கிருஷ்ணகிரி  தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற பணிகள் நேற்று முடங்கியது.

Related Stories:

>