பாளை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ஒருவர் அடித்துக் கொலை: 3 பேர் படுகாயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் விக்னேஷை (18) காதலித்த மாணவி அவரை கழற்றிவிட்டு வேறு ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி அவர் மிரட்டியதால் கூலிப்படையை அவரை கொல்வதற்கு மாணவி ஏவியுள்ளார். கடந்த 8ம் தேதி அந்த கூலிப்படையினர் விக்னேஷை வெடிகுண்டுகள், அரிவாளை காட்டி மிரட்டி அனுப்பினர்.

இதுகுறித்து விக்னேஷ் புகாரின்படி களக்காடு போலீசார்  மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்த முத்துமனோ, களக்காடு அருள்துரைசிங் என்ற கண்ணன், விஜயநாராயணம் மாதவன், சந்திரசேகர் என்ற சேகர் ஆகிய 4 பேரை கைது செய்து தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் சிறையில் அடைத்தனர்.

நேற்று மாலை 3 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் முத்துமனோ உட்பட 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு வார்டன்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு எதிர்பிரிவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கைதிகள் திடீரென முத்துமனோ உள்ளிட்ட 4 பேரையும் சுற்றிவளைத்து கற்களாலும், கம்புகளாலும் சரமாரியாக தாக்கினர். தடுத்த சிறை வார்டன்களை தள்ளி விட்ட கும்பல், 4 பேரையும் சிறைக்குள் ஓட, ஓட விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த முத்துமனோ நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரவில் பலியானார். மற்ற 3 பேரும் பாளை சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>