தாராபுரம் நகராட்சி தூய்மை பணிக்கு நியமனம் வடமாநில தொழிலாளர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டம்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தினமும் 35 டன் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்படுகின்றன. இப்பணிகளுக்காக நகராட்சியின் நிரந்தரப் பணியாளர்களாக 25 பேர் உள்ளனர். தற்போது, 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை நியமித்து தினமும் தூய்மைப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 15 பேரை நகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்ததாரர் நேற்று திடீரென பணியமர்த்தி உள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், வடமாநிலத்தவரை பணியமர்த்த கூடாது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்றி வரும் தங்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் சென்றனர். அதன்பின், உள்ளூர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். கடந்த 3 நாட்களாக ஒப்பந்த பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால் நகர் முழுவதும் குப்பை மலைபோல் தேங்கிக் கிடக்கிறது.

Related Stories:

>