×

பொருளுக்கான விலையில் 60 சதவீதம் போவதாக வேதனை இரவு நேர ஊரடங்கில் சரக்கு வாகனங்களை மறித்து வசூல்: வலுக்கட்டாயமாக மாமூல் கேட்பதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார்

சேலம்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்ைக காரணம் காட்டி சரக்கு வாகனங்களை மறித்து மாமூல் வசூலிப்பதாகவும், இதனால் பாதுகாப்பு இல்லாத  நிலை உருவாகி இருப்பதாகவும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தற்ேபாது  வேகமாக பரவி வருகிறது. இதனால் நேற்று முன்தினம்(20ம்தேதி) முதல்  பல  மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதிகாலை 4மணி முதல் இரவு 10மணிவரை மட்டுமே கடைகள், ஓட்டல்கள், தொழில்  நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்துகளின் இயக்கமும்  வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு  எந்த தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் சரக்கு வாகனங்களை மடக்கி, போலீசார் வலுக்கட்டாயமாக மாமூல் வசூலிப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக  அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை  அதிகாரிகளுக்கு புகாரும் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது: இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் சரக்கு வாகனங்களை இயக்க எந்த தடையும் இல்லை என்று கூறி,  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காய்கறிகள், மளிகை பொருட்wபொருட்கள், பால், குடிநீர் மற்றும்  அத்தியாவசிய சரக்குகள் ஏற்றி வரும் லாரிகளை சில பகுதிகளில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த விளை பொருட்களை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்துச்  செல்கின்றனர். இதையும் பல இடங்களில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதேபோல் அவர்களிடம் பல இடங்களில் குறைந்தது  200 முதல் 500வரை வசூலிக்கின்றனர். இதனால் அவர்களது பொருளுக்கான விலையில் 60 சதவீதத்தை இவர்களிடமே கொடுத்து விட்டுச் செல்ல  வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் விளை பொருட்களை பறிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு கொடுக்க மறுத்தால்  வண்டிகளை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து தாமதப்படுத்துகின்றனர்.

வழக்கமாக கொரோனா ஊரடங்கு இல்லாத காலத்திலேயே மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் அத்தியாவசிய சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்களை,  இரவு நேரங்களில் அனுமதிப்பதில்லை. ஆனால் தற்ேபாது இரவு நேரத்தில் அறவே அனுமதிக்கவில்லை. பகல் நேரத்தில் மட்டுமே வாகனங்கள்  இயங்க வேண்டும் என்று கறாராக கூறும் போலீசார், சரக்குகளை கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. மேலும் இரவு முழுவதும் கண்விழித்து  வாகனத்தை இயக்கி வந்த பிறகும் பொருட்களுக்கும், வாகனத்திற்கும், ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு முருகன்  வெங்கடாசலம் கூறினார்.

உடனே தெளிவு படுத்த வேண்டும்
‘‘தமிழகத்தில் அரசு, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கிறதா? இல்லையா?  என்பதை உடனடியாக தெளிவுபடுத்த  வேண்டும். அப்படி அனுமதி அளிக்கிறது என்றால் காவல்துறை அதிகாரிகளிடம் காலம் தாழ்த்தாமல் அறிவுறுத்த வேண்டும். மேலும் இரவு நேரங்களில்  அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் நகர, கிராமப்புறங்களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.  அதோடு இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்,’’ என்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின்  சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




Tags : Truck Owners' Association , Truck Owners' Association Complains of Forcing Orders to Forgotten Trucks During the Night Curfew
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்