திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் குறையுது : மக்களே தண்ணீரை வீணாக்க வேண்டாம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போதிய மழையில்லாத காரணத்தாலும், கோடை வெயில் கொளுத்துவதாலும்,  கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் இந்த பெரியகுளம் கண்மாய்  தான் பெரியது. இக்கண்மாய் தான் நகரின் நிலத்தடி நீர் உயர காரணமாக உள்ளது. இந்தக் கண்மாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பியிருந்தது. இதனால் தண்ணீர் பற்றாகுறையில்லாமல் இருந்து. பல  ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் மறுகாலும் பாய்ந்தது.

இப்பகுதியில் மழை பொய்த்ததாலும் ,கொளுத்தும் வெயிலினாலும் பெரியகுளம் கண்மாயில்  தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் திருவில்லிபுத்துார் சுற்றுப்பகுதிகளில்  பெரிய அளவில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இப்பகுதியில் உள்ள மழைநீர் ஆர்வலர்கள் கூறுகையில், பெரியகுளம் கண்மாயை நம்பி தான் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உள்ளது.  இக்கண்மாயில் தண்ணீர் குறைந்தால், அதன்பாதிப்பு நகரில் கடுமையாக எதிரொலிக்கும். மேலும் ஆகாயத்தாமரை செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளது.  இவை நீரை உறிஞ்சி எடுத்து விடும். எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாயில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மக்களும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும், என்றார்.

Related Stories:

More
>