×

அரியலூரில் பழமையான ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

அரியலூர்: அரியலூரில் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரியலூரில் இருந்து பொய்யூர் செல்லும் சாலையில் பள்ளக்கிருஷ்ணாபுரம் அருகே சாலையோரம் 25 ஆண்டு கால பழமையான ஆலமரம் உள்ளது.இந்த ஆலமரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வந்தன. மேலும் இச்சாலை வழியே செல்லும் மக்கள் இளைப்பாறுவதற்கும் இந்த  ஆலமரமானது பயன்பட்டு வந்தது. இந்நிலையில் உயரழுத்த மின்சாரபாதை செல்வதற்காக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மின்சாரத்துறையினர்  அம்மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அப்துல்கலாம் இளைஞர் மன்றத்தை சார்ந்த  இளைஞர்கள் மரத்தை வெட்டக் கூடாது எனக் கூறி மரத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மரத்தை வெட்டும் பணி  நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகளுடன் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என  காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறும்போது, இந்தியாவின் தேசிய மரமான ஆலமரம் என்று கூறிக்கொண்டே அதனை வெட்டும்  முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். மரங்களில் அதிக அளவு ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய மரமாக ஆலமரம் திகழ்ந்து வருகிறது. மிகப்பழமை  வாய்ந்த இம்மரமானது பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வருகிறது. அவ்வாறு உள்ள இந்த பெரிய ஆல மரத்தை வெட்டுவதற்கு பதிலாக  மின்னழுத்தம் கம்பி செல்லும் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினர்.



Tags : Ariyalur , Public protest to cut down the oldest tree in Ariyalur
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...